1
தேவனாகிய கர்த்தர் படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா என்றது.
2
பெண், பாம்பைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள மரங்களின் பழங்களைச் சாப்பிடலாம்;
3
ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாமலிருக்க அதை சாப்பிடவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.
4
அப்பொழுது பாம்பு, பெண்ணை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
5
நீங்கள் இதை சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
6
அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ஆசைப்படத்தக்க பழமுமாக இருக்கிறது என்று கண்டு, அந்தப் பழத்தைப் பறித்து, சாப்பிட்டு, தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான்.
7
அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தி இலைகளைத் தைத்து, தங்களுடைய இடுப்புகளை மறைத்துக்கொண்டார்கள்.
8
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவனுடைய மனைவியும் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக விலகி, தோட்டத்தின் மரங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள்.
9
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
10
அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாக இருப்பதால் பயந்து, ஒளிந்துகொண்டேன் என்றான்.
11
அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டாயோ என்றார்.
12
அதற்கு ஆதாம்: என்னுடன் இருப்பதற்காக தேவரீர் தந்த பெண்ணே, அந்த மரத்தின் பழத்தை எனக்குக் கொடுத்தாள், நான் சாப்பிட்டேன் என்றான்.
13
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் பெண்ணை நோக்கி: நீ ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: பாம்பு என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன் என்றாள்.
14
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் பாம்பைப் பார்த்து: நீ இதைச் செய்ததால் அனைத்து நாட்டுமிருகங்களிலும் அனைத்து காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
15
உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவளுடைய வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
16
அவர் பெண்ணை நோக்கி: நீ கர்ப்பவதியாக இருக்கும்போது உன் வேதனையை மிகவும் அதிகப்படுத்துவேன்; வேதனையோடு பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன்னுடைய கணவனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
17
பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய்.
18
அது உனக்கு முட்செடிகளை முளைப்பிக்கும்; நிலத்தின் பயிர்வகைகளைச் சாப்பிடுவாய்.
19
நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
20
ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவள் உயிருள்ள அனைவருக்கும் தாயானவள்.
21
தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவனுடைய மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.