1
அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லா வேலைக்காரர்களுக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கமுடியாமல்: அனைவரையும் என்னைவிட்டு வெளியே போகச்செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தும்போது, ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.
2
அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர்கள் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.
3
யோசேப்பு தன் சகோதரர்களைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு முன்பாகக் கலக்கமடைந்திருந்ததினாலே, அவனுக்கு பதில் சொல்லமுடியாமல் இருந்தார்கள்.
4
அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: என்னருகில் வாருங்கள் என்றான். அவர்கள் அருகில்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்திற்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.
5
என்னை இந்த இடத்திற்கு வருவதற்காக விற்றுப்போட்டதினால், நீங்கள் வருத்தப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; உயிர்களைப் பாதுகாக்க தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
6
தேசத்தில் இப்பொழுது இரண்டு வருடங்களாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருடங்கள் விதைப்பும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.
7
பூமியிலே உங்கள் வம்சம் அழியாமலிருக்க உங்களை ஆதரிப்பதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
8
ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இந்த இடத்திற்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவருடைய குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், முழுஎகிப்துதேசத்திற்கும் அதிபதியாகவும் வைத்தார்.
9
நீங்கள் சீக்கிரமாக என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.
10
நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற எல்லாவற்றோடும் கோசேன் நாட்டில் குடியிருந்து என் அருகில் இருக்கலாம்.
11
உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற எல்லாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருடங்கள் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய மகனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.
12
இதோ, உங்களோடு பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.
13
எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற அனைத்து மகிமையையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாக இந்த இடத்திற்கு வரும்படிச் செய்யுங்கள் என்று சொல்லி;
14
தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.
15
பின்பு தன் சகோதரர்கள் அனைவரையும் முத்தம்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவனுடைய சகோதரர்கள் அவனோடு உரையாடினார்கள்.