1
லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற மகளாகிய தீனாள், தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.
2
அவளை ஏவியனான ஏமோரின் மகனும் அந்த தேசத்தின் இளவரசனுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடு உறவுகொண்டு, அவளைத் தீட்டுப்படுத்தினான்.
3
அவனுடைய மனம், யாக்கோபின் மகளாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அவளுடைய மனதுக்கு இன்பமாகப் பேசினான்.
4
சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று சொன்னான்.
5
தன் மகளாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவனுடைய மகன்கள் அவனுடைய மந்தையினிடத்தில் வயல்வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வரும்வரைக்கும் யாக்கோபு பேசாமலிருந்தான்.
6
அந்த நேரத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடு பேசும்படி அவனிடத்திற்கு வந்தான்.
7
யாக்கோபின் மகன்கள் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வயல்வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் மகளோடு உறவுகொண்டு, செய்யத்தகாத புத்திகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர்கள் மனம்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.
8
ஏமோர் அவர்களோடு பேசி: என் மகனாகிய சீகேமின் மனது உங்கள் மகளின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்.
9
நீங்கள் எங்களோடு சம்பந்தங்கலந்து, உங்கள் மகள்களை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் மகள்களை உங்களுக்குக் கொண்டு,
10
எங்களோடு குடியிருங்கள்; தேசம் உங்களுக்கு முன்பாக இருக்கிறது; இதில் குடியிருந்து, வியாபாரம்செய்து, பொருள் சம்பாதித்து, அதைக் கையாண்டுகொண்டிருங்கள் என்றான்.
11
சீகேமும், அவளுடைய தகப்பனையும், சகோதரர்களையும் நோக்கி: உங்களுடைய கண்களில் எனக்கு தயவு கிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்;
12
பெண்ணுக்குக் கொடுக்கவேண்டியவைகளையும் வெகுமதிகளையும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணைமாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.
13
அப்பொழுது யாக்கோபின் மகன்கள் தங்கள் சகோதரியாகிய தீனாளை சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினதால், அவனுக்கும் அவனுடைய தகப்பனாகிய ஏமோருக்கும் தந்திரமான மறுமொழியாக:
14
விருத்தசேதனமில்லாத மனிதனுக்கு நாங்கள் எங்களுடைய சகோதரியைக் கொடுக்கமுடியாது; அது எங்களுக்கு அவமானமாயிருக்கும்.
15
நீங்களும், உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம்செய்யப்பட்டு எங்களைப்போல் ஆவீர்களானால், நாங்கள் சம்மதித்து,
16
உங்களுக்கு எங்கள் மகள்களைக் கொடுத்து, உங்கள் மகள்களை எங்களுக்குக் கொண்டு, உங்களோடு குடியிருந்து, ஒரே ஜனமாக இருப்போம்.
17
விருத்தசேதனம் செய்துகொள்வதற்கு சம்மதிக்கவில்லை என்றால், நாங்கள் எங்களுடைய மகளை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்.